ஒரே ஆண்டில் ரூ.7940 கோடி டெண்டர் எடுத்த நெடுஞ்சாலை கான்ட்ராக்டர் அலுவலகத்தில் மீண்டும் ஐடி ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே ஆண்டில் ரூ.7940 கோடி டெண்டர் எடுத்த நெடுஞ்சாலை கான்ட்ராக்டர் அலுவலகத்தில் மீண்டும் ஐடி ரெய்டு

சென்னை: அமைச்சர்களுக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தென் மாவட்டங்களில் புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகளை புதுப்பிப்பது போன்ற பணிகளை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிஎஸ்கே என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாத்துரை.

இவரது மகன்கள் 3 பேர் உள்ளனர். இவர்கள்தான் சென்னை, மதுரை, கோவையில் அலுவலகங்களை தொடங்கி கான்ட்ராக்ட் பணிகளை செய்து வருகின்றனர். அதில் நாகராஜ், சென்னையில் இருந்து கொண்டு அமைச்சர்களுக்கு நெருக்கமானவராக செயல்பட்டு வருகிறார்.

இவர்தான் பல கான்ட்ராக்ட்டுகளை எடுத்து வந்தார். பல அமைச்சர்களின் வீடுகளில்தான் அவர் தங்கியிருப்பார்.

இவர் வருமான வரித்துறைக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக புகார் எழுந்தது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் செய்யாத்துரை மற்றும் அவரது 3 மகன்கள், சென்னையில் உள்ள நண்பர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் கடந்த ஜூலை 16ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் கார்கள், கிணறுகள், வீடுகளில் மறைத்து வைத்திருந்த ரூ. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்ட் குறித்தும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

இந்த ஆவணங்கள், ரொக்கப்பணம், தங்கம், வைர நகைகள் குறித்து கான்ட்ராக்டர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், அதில் பல முரண்பாடுகளும், மோசடிகளும் செய்திருப்பது தெரியவந்தது.

இதனால், அருப்புக்ேகாட்டையில் உள்ள செய்யாத்துரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கான ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை கேட்டு செய்யாத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனையில் பல நெடுஞ்சாலை கான்ட்ராக்ட் குறித்து மேலும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. அவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இன்று மாலைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு, செய்யாத்துரை, அவரது மகன்கள் நாகராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் மீண்டும் சம்மன் கொடுத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை