பயிற்சியாளரானார் நெஹ்ரா | செப்டம்பர் 05, 2018

தினமலர்  தினமலர்
பயிற்சியாளரானார் நெஹ்ரா | செப்டம்பர் 05, 2018

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடருக்கான பெங்களூரு அணியின் பயிற்சியாளராக ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. இந்த ஆண்டு நடந்த 11வது ஐ.பி.எல்., சீசனில் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ், பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருந்தும் பெங்களூரு அணி 6வது இடம் பிடித்து லீக் சுற்றோடு திரும்பியது. இதனால் இந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் நியூசிலாந்து ‘சுழல்’ வீரர் டேனியல் வெட்டோரி அதிரடியாக நீக்கப்பட்டார். முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன் கேரி கிறிஸ்டன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, பெங்களூரு அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இந்த அணியின் ‘பவுலிங்’ பயிற்சியாளராக செயல்பட்ட இவர், கிறிஸ்டன் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் இணைந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு அணி தலைவர் சஞ்சீவ் குரியவாலா கூறுகையில், ‘‘பெங்களூரு அணியின் பயிற்சியாளர் குழுவில் ஆஷிஸ் நெஹ்ரா இணைந்தது மகிழ்ச்சி. நெஹ்ரா மற்றும் கிறிஸ்டன் இணைந்து கேப்டன் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட உதவுவார்கள்,’’ என்றார்.

மூலக்கதை