ஆசிய கோப்பை: ஹாங்காங் தகுதி | செப்டம்பர் 06, 2018

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை: ஹாங்காங் தகுதி | செப்டம்பர் 06, 2018

கோலாலம்பூர்: ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட ஹாங்காங் அணி தகுதி பெற்றது. இதற்கான தகுதிச் சுற்று பைனலில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை தோற்கடித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் வரும் 15–28ல் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை என 5 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள ஒரு இடத்துக்கு மலேசியாவில் தகுதிச் சுற்று நடத்தப்பட்டது. இதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், நேபாளம், மலேசியா, ஓமன் என 6 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலுக்கு ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் முன்னேறின. ‘டாஸ்’ வென்ற ஹாங்காங் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

முதலில் ‘பேட்’ செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணி, 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின், 24 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ஆஷ்பாக் அகமது (79) கைகொடுக்க யு.ஏ.இ., அணி 24 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

பின், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 24 ஓவரில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு நிஜாகத் கான் (38), கேப்டன் அன்ஷுமான் ராத் (28), கிறிஸ்டோபர் கார்டர் (33), எஹ்சன் கான் (29) கைகொடுத்தனர்.

ஹாங்காங் அணி 23.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆசிய கோப்பை பிரதான சுற்றுக்கு 3வது முறையாக தகுதி பெற்றது. இதற்கு முன் 2004, 2008ல் ஆசிய கோப்பையில் விளையாடிய ஹாங்காங் அணி லீக் சுற்றோடு திரும்பியது.

இம்முறை ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹாங்காங் அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 16ல் சந்திக்கிறது. அதன்பின் 19ல் இந்தியாவை எதிர்கொள்கிறது.

மூலக்கதை