சாதிக்குமா ரோகித்–தவான் கூட்டணி: என்ன சொல்கிறார் பிரட் லீ | செப்டம்பர் 06, 2018

தினமலர்  தினமலர்
சாதிக்குமா ரோகித்–தவான் கூட்டணி: என்ன சொல்கிறார் பிரட் லீ | செப்டம்பர் 06, 2018

மும்பை: ‘‘ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் கூட்டணி முக்கிய பங்குவகிக்கும்,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான (செப். 15–28, இடம்: யு.ஏ.இ.,) இந்திய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள்ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறியது: ஆசிய கோப்பையில் விராத் கோஹ்லி இல்லாத நிலையில் இந்திய அணியின் ‘பேட்டிங்’ வரிசையை ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி பலப்படுத்தும். இதில் கேப்டன் பொறுப்பு, ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்.

இத்தொடரில் ரோகித் சர்மா, இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம் என பரவலாக கூறப்படுகிறது. என்னால் இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் யு.ஏ.இ., ஆடுகளம் இவரது ‘பேட்டிங்’ ஸ்டைலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து ரன் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

இதேபோல ஷிகர் தவானுக்கும் ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதால் ரன் மழை பொழிவார் என நம்புகிறேன்.

இவ்வாறு பிரட் லீ கூறினார்.

மூலக்கதை