ஐந்தாவது டெஸ்டில் கிடைக்குமா ஆறுதல்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு | செப்டம்பர் 06, 2018

தினமலர்  தினமலர்
ஐந்தாவது டெஸ்டில் கிடைக்குமா ஆறுதல்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு | செப்டம்பர் 06, 2018

ஓவல்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று துவங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட இந்திய அணி இதில் சாதித்து ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே அடுத்தடுத்து தொடரை இழந்த (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து) இந்திய அணி இம்முறை ஆறுதல் வெற்றி பெற்றால் ஓரளவுக்கு கவுரமாக (2–3) இந்தியா திரும்பலாம்.

வருவாரா பிரித்வி: தவிர ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லும் முன் சற்று நம்பிக்கை கிடைக்கும். இதனால் இன்று களமிறங்கும் அணியில் மீண்டும் மாற்றம் இருப்பது உறுதி. தவானுடன் சேர்ந்து தொடர்ந்து சொதப்பும் லோகேஷ் ராகுலுக்குப் பதில் பிரித்வி ஷா இடம் பெறுவார் என நம்பப்படுகிறது.

அதேநேரம் 18 வயது மட்டும் ஆன இவர், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தரும் நெருக்கடியை சந்தித்து மீண்டு வருவாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் தவான்–ராகுல் கூட்டணிக்கு கடைசி வாய்ப்பு தந்து பார்க்கலாம் என்ற எண்ணமும் நிலவி வருகிறது.

அடுத்து வரும் புஜாரா, ரகானே சூழ்நிலைக்கு ஏற்ப சற்று நிலைத்து ரன்கள் சேர்த்தால் வெற்றிக்கு உதவியாக அமையும். பாண்ட்யா தன் மீதான எதிர்பார்ப்பை சரியாக நிறைவேற்றவில்லை. இவருக்குப் பதில் ‘சுழல்’ ‘ஆல் ரவுண்டர்’ ஹனுமா விஹாரிக்கு இடம் தந்து சொதித்து பார்க்கலாம்.

பும்ராவுக்கு ஓய்வு?: வரும் ஆசிய கோப்பை தொடரை கணக்கில் கொண்டு, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்படலாம். இவருக்குப் பதில் உமேஷ் யாதவ் இடம் பெற காத்திருக்கிறார். மற்றபடி முகமது ஷமி, இஷாந்த் மீண்டும் இணைந்து மிரட்டினால் அணிக்கு நல்லது. ‘சுழல்’ அஷ்வின் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் இன்று ஜடேஜா களமிறங்குவது உறுதி எனத் தெரிகிறது.

குக் கடைசி: இங்கிலாந்து அணிக்காக கடைசி டெஸ்டில் களமிறங்குகிறார் அலெஸ்டர் குக். இவருடன் இணைந்து தடுமாறும் ஜென்னிஸ், இன்று சிறப்பான துவக்க தர முயற்சிக்கலாம். கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோவ் உள்ளிட்ட ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் தடுமாறினாலும் பின் வரிசையில் வரும் பட்லர், கர்ரான் இருவரும் இந்திய அணிக்கு பெரும் ‘வில்லனாக’ உருவெடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணி தொடரை வென்று விட்டதால் பவுலிங்கில் ‘சீனியர்’ ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் என இருவருக்கும் ஓய்வு கொடுக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் வோக்ஸ், ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீச்சு பிரிவுக்கு பலம் சேர்க்கலாம்.

மழை வருமா

ஐந்தாவது டெஸ்ட் நடக்கவுள்ள ஓவலில் வரும் ஐந்து நாட்களிலும் வானம் மேகமூட்டமாக காணப்படும். இரண்டாவது நாள் காலையில் மழை வர 25 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஆடுகளம் எப்படி

ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் லேசான புற்கள் உள்ளன. இதனால் மற்ற டெஸ்ட் போல இங்கும் ஆடுகளம் வேகத்துக்கும், பேட்டிங்கிற்கும் கைகொடுக்கலாம்.

47 ஆண்டுகளுக்கு முன்...

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 12 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 47 ஆண்டுக்கு முன் 1971ல் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட்டில் இங்கிலாந்தை வென்றது. மற்றபடி 4ல் தோற்றது. 7 போட்டிகளை ‘டிரா’ செய்தது.

சொல்வதெல்லாம் உண்மையா

‘கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் இப்போதுள்ள அணி தான் சிறந்தது, அன்னியமண்ணில் 7 டெஸ்டில் வென்றோம், 3 தொடர்களை கைப்பற்றினோம்,’ என்கிறார் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ஆனால் கங்குலி தலைமையில் இங்கிலாந்து (2002ல் 1–1), ஆஸ்திரேலியா (2003–04ல் 1–1) மண்ணில் தொடரை ‘டிரா’ செய்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் லாரா, சந்தர்பால், கூப்பர் அடங்கிய அணியை போர்ட் ஆப் ஸ்பெயின் (2002) டெஸ்டில் வென்றது. பாகிஸ்தானில் கோப்பை (2004, 2–1) கைப்பற்றியது.

* டிராவிட் அணி 2006ல் வெஸ்ட் இண்டீசில் தொடரை (1–0) வென்றது.

* உலகின் அபாயகரமான ‘பவுன்சர்’ ஆடுகளம் கொண்ட பெர்த் டெஸ்டில் (2008) கும்ளேயின் இந்திய அணி வெற்றி பெற்றது.

* தோனி தலைமையில் முதன் முறையாக நியூசிலாந்து மண்ணில் (2009) கோப்பை வென்றது. தென் ஆப்ரிக்காவில் தொடரை ‘டிரா’ (1–1) செய்தது.

* மாறாக கோஹ்லி அணி, தென் ஆப்ரிக்கா (1–2), இங்கிலாந்து (1–3) மண்ணில் தொடரை தோற்றது. இலங்கை மண்ணில் மட்டும் 5 டெஸ்டில் வென்றது. நிலைமை இப்படி இருக்க ரவி சாஸ்திரி சொல்வது சரிதானா என விவாதம் எழுந்துள்ளது.

மூலக்கதை