‘துாண்’ புஜாரா துணிச்சல் சதம் | ஆகஸ்ட் 31, 2018

தினமலர்  தினமலர்
‘துாண்’ புஜாரா துணிச்சல் சதம் | ஆகஸ்ட் 31, 2018

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்துாணாக நின்ற புஜாரா துணிச்சலாக சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (3), லோகேஷ் ராகுல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏமாற்றிய ராகுல்

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பிராட் ‘வேகத்தில்’ ராகுல் (19), தவான் (23) சிக்கினர். புஜாரா, கேப்டன் கோஹ்லி இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தபோது, கர்ரான் பந்தில் கோஹ்லி (46) ஆட்டமிழந்தார்.

புஜாராஅபாரம்

புஜாரா நிதானமாக விளையாடினார்.ஸ்டோக்ஸ் பந்தில் ரகானேவுக்கு எல்.பி.டபிள்யு., முறையில் அவுட் தரப்பட்டது. ரகானே ‘ரிவியூ’ கேட்க, ஸ்டோக்ஸ் ‘கிரீசை’ தாண்டி கால் வைத்தது போல தெரிந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர் அவுட்டை உறுதி செய்ய, ரகானே (11) திரும்பினார்.மொயீன் அலி ‘சுழலில்’ ரிஷாப் (0), பாண்ட்யா (4), அஷ்வின் (1) உள்ளிட்டோர் சிக்கினர். அபாரமாக ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் 15வது சதம் கடந்தார். பும்ரா (6) கிளம்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. புஜாரா (132) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து 21 ரன்கள் பின்தங்கி இருந்தது. குக் (2), ஜென்னிங்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் கோஹ்லி 9 ரன்களை எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் (119) எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை (120) முந்தி இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தை கவாஸ்கர் (117) வகிக்கிறார்.

 

மூலக்கதை