கோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’: ரோகித் புதிய கேப்டன் | செப்டம்பர் 01, 2018

தினமலர்  தினமலர்
கோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’: ரோகித் புதிய கேப்டன் | செப்டம்பர் 01, 2018

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ரோகித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் 15–28ல், 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகும் ஒரு அணி உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா–பாக்., மோதல்

ஆறு முறை (1984, 88, 90–91, 95, 2010, 2016) கோப்பை வென்ற இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் அணியை வரும் 18ல் சந்திக்கிறது. அதன்பின் 19ல் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

கோஹ்லி இல்லை

இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி, 6 டெஸ்டில் (எதிர்: வெஸ்ட் இண்டீசுடன் 2, ஆஸி.,யுடன் 4) விளையாட இருப்பதால் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அணியை துவக்க வீரர் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். துணைக் கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரெய்னா ‘நோ’

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்திருந்த ரெய்னா, ஸ்ரேயாஸ் ஐயர், வேகப்பந்துவீச்சாளர்களான சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ‘யோ யோ’ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அம்பதி ராயுடு, தொடையின் பின்பகுதி காயத்தில் இருந்து மீண்ட ‘ஆல்–ரவுண்டர்’ கேதர் ஜாதவ் வாய்ப்பு பெற்றனர்.

கலீல் அறிமுகம்

ராஜஸ்தானை சேர்ந்த ன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, 20, புதுமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இதுவரை 17 ‘லிஸ்ட் ஏ’ பிரிவு போட்டிகளில் (28 விக்கெட்) விளையாடி உள்ள இவர், கடந்த 2016ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடி உள்ளார். தவிர சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருந்தார்.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி: (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.

3

ஆசிய கோப்பையில் இம்முறை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இவ்விரு அணிகள், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் பட்சத்தில் ‘சூப்பர் 4’ சுற்றில் மோதலாம். இதில் சிறப்பாக செயல்பட்டால் பைனலில் சந்திக்கலாம்.

மூலக்கதை