இந்திய அணியின் பிடி நழுவுமா | செப்டம்பர் 01, 2018

தினமலர்  தினமலர்
இந்திய அணியின் பிடி நழுவுமா | செப்டம்பர் 01, 2018

சவுத்தாம்ப்டன்: நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் பிடி மெல்ல மெல்ல நழுவுகிறது. பட்லர் அரை சதம் அடிக்க, இங்கிலாந்து வலுவான முன்னிலை பெற்றது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246, இந்தியா 273 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் (2), ஜென்னிங்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷமி அசத்தல்

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா ‘வேகத்தில்’ குக் (12) ஆட்டமிழந்தார். முன்னரே களமிறக்கப்பட்ட மொயீன் அலி (9) நிலைக்கவில்லை. கேப்டன் ஜோ ரூட், ஜென்னிங்ஸ் பொறுப்புடன் விளையாடினர். இந்த நேரத்தில் மிரட்டினார் ஷமி. இவரது 32வது ஓவரின் 5,6வது பந்து முறையே ஜென்னிங்ஸ் (36), பேர்ஸ்டோவ் (0) சிக்கினர். ரூட், ஸ்டோக்ஸ் ஜோடி நிதான ஆட்டத்திற்கு மாறினர். மீண்டும் அணிக்கு கைகொடுத்தார் ஷமி. இவரது துல்லிய ‘த்ரோவில்’ ரூட் (48) ரன் அவுட்டானார். அஷ்வின் ‘சுழலில்’ ஸ்டோக்ஸ் (30) வெளியேறினார். 

பட்லர் அரை சதம்

பின், பட்லர், கர்ரான் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். ‘வேகம், சுழல்’ என இரண்டையும் எளிதாக சமாளித்தனர். அபாரமாக விளையாடிய பட்லர் அரை சதம் அடித்து அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத்தந்தார். இவர் 69 ரன்களில் இஷாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். ஷமி பந்தில் ரஷித் (11) அவுட்டானார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து, 233 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கர்ரான் (37) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். 

இஷாந்த்திற்கு எச்சரிக்கை

ஆடுகளத்தின் மையப்பகுதியை சேதப்படுத்துவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி தவறு. இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பவுலிங் செய்தபோது இந்த விதியை இரண்டு முறை (13.3 ஓவர், 17.5 ஓவர் ) மீறினார். இதனால், அம்பயர் புரூஸ் ஆக்சன்போர்டு (ஆஸி.,) இஷாந்த்தை எச்சரித்தார். இந்திய அணி கேப்டன் கோஹ்லியிடமும் சேதமான பகுதியை சுட்டிக்காட்டினார்.

மூலக்கதை