தொடரை இழந்தது இந்தியா: நான்காவது டெஸ்டில் தோல்வி | செப்டம்பர் 02, 2018

தினமலர்  தினமலர்
தொடரை இழந்தது இந்தியா: நான்காவது டெஸ்டில் தோல்வி | செப்டம்பர் 02, 2018

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 1–2 என பின்தங்கி இருந்தது. நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246, இந்தியா 273 ரன்கள் எடுத்தன.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. கர்ரான் (37) அவுட்டாகாமல் இருந்தார். 

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கர்ரான் (46) ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.

கோஹ்லி அரை சதம்

பின் 245 ரன்கள் இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் அதிர்ச்சி தந்தனர். பிராட் பந்தில் லோகேஷ் ராகுல் (0) ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் ‘வேகத்தில்’ புஜாரா (5), தவான் (17) அவுட்டாகினர். பின் கேப்டன் கோஹ்லி, ரகானே பொறுப்பாக விளையாடினர். கோஹ்லி டெஸ்ட் அரங்கில் 19வது அரை சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தபோது, மொயின் பந்தில் கோஹ்லி (58) அவுட்டானார். பாண்ட்யா ‘டக்’ அவுட்டானார். மீண்டும் வில்லனாக வந்த மொயின் அலி இம்முறை ரகானேவை வெளியேற்ற(51), இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாமல் போனது. இஷாந்த் (0), ஷமி (8) விரைவில் திரும்பினர். அஷ்வின் 25 ரன்களில் கர்ரான் பந்தில் சிக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயின் 4 விக்கெட் வீழ்த்தினார். ஐந்தாவது டெஸ்ட் செப்டம்பர் 7ல் ஓவலில் துவங்குகிறது.

4000

நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய கேப்டன் ஆனார். இதற்கு முன், தோனி 3454 ரன்கள் எடுத்ததே அதிகம். சர்வதேச அளவில் 10வது கேப்டன் என்ற பெருமை பெற்றார்.

* தவிர, இந்த இலக்கை வேகமாக (65 இன்னிங்ஸ்) எட்டிய முதல் கேப்டனும் கோஹ்லிதான். இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா 71 இன்னிங்சில் எட்டியதே சாதனையாக இருந்தது.

544

இத்தொடரில் இதுவரை கோஹ்லி 544 ரன்கள் (4 டெஸ்ட்) எடுத்துள்ளார். இதனையடுத்து, இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு கேப்டன்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தார். முதல் நான்கு இடங்கள் முறையே வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் (722 ரன், 1966), தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (714, 2003), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (597, 1985), தென் ஆப்ரிக்காவின் ஆலன் மெல்வில்லே (569, 1947) உள்ளனர்.

8

கேப்டன் கோஹ்லி இரண்டாவது இன்னிங்சில் 8வது முறையாக அரை சதம் கடந்தார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது இன்னிங்சில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் லட்சுமண், சேவக் உடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார். டிராவிட், சச்சின் தலா 10 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தை கவாஸ்கர் (12) வகிக்கிறார்.

தொடரும் ஆதிக்கம்

கடந்த 2014ல் இதே சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி(2+6) 8 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். தற்போதைய டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து (5+4) 9 விக்கெட் சாய்த்து, இந்தியாவுக்கு மீண்டும் ‘வேட்டு’ வைத்தார்.

 

..............

 

 

மூலக்கதை