அலெஸ்டர் குக் ஓய்வு | செப்டம்பர் 03, 2018

தினமலர்  தினமலர்
அலெஸ்டர் குக் ஓய்வு | செப்டம்பர் 03, 2018

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், 33. கடந்த 2006ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 160 டெஸ்ட் (12,254 ரன்), 92 ஒருநாள் (3204), 4 சர்வதேச ‘டுவென்டி–20’ (61) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், டெஸ்ட் அரங்கில் அதிக ரன் (12,254 ரன்), அதிக சதம் (32), அதிக அரைசதம் (56) அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2010ல் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், அதிகபட்சமாக 59 போட்டிகளில் 24 வெற்றி, 13 ‘டிரா’, 22 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2011ல் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 294 ரன் குவித்தது இவரது அதிகபட்ச ரன்னாக உள்ளது.

தற்போது இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் ‘பார்மின்றி’ தவிக்கும் இவர், 7 இன்னிங்சில் 109 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இவரது ‘பேட்டிங்’ குறித்து விமர்சனம் எழுந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு (செப். 7–11, இடம்: ஓவல், லண்டன்) பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குக் கூறியது: கடந்த சில மாதங்களாக ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வந்தேன். பின், இந்திய தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற முடிவு செய்தேன். இது கடினமான முடிவு என்றாலும், சரியான நேரமாக கருதுகிறேன். இதன்மூலம் திறமையான இளம் வீரர்களுக்கு, தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

எனது சிறப்பான செயல்பாட்டிற்கு முன்னாள் கேப்டன் கிரகாம் கூச் வழங்கிய ஆலோசனைகள் முக்கிய காரணம். எனக்கு 12 வயது முதல் ஆதரவு அளித்து வரும் எசக்ஸ் கவுன்டி கிரிக்கெட் கிளப்பிற்கு நன்றி.

இவ்வாறு குக் கூறினார்.

மூலக்கதை