இந்திய அணி தோல்வியின் பின்னணி | செப்டம்பர் 03, 2018

தினமலர்  தினமலர்
இந்திய அணி தோல்வியின் பின்னணி | செப்டம்பர் 03, 2018

புதுடில்லி: டெஸ்ட் தொடரில் கேப்டன் கோஹ்லியை தான் இந்தியா அதிகம் சார்ந்திருந்தது. இவர் சோபிக்க தவறினால், அணி சரிந்துவிடும் நிலை காணப்பட்டது. ‘சுழலில்’ அஷ்வின் சொதப்பியதால், சவுத்தாம்ப்டன் டெஸ்டில் தோல்வியில் இருந்து மீள முடியவில்லை.  

டெஸ்ட் அரங்கில் ‘நம்பர்–1’ அணி இந்தியா. தென் ஆப்ரிக்க தொடரில் எப்படியும் வெல்லும் என நம்பப்பட்டது. இங்கு கேப்டன் கோஹ்லி (3 டெஸ்ட், 286 ரன்) மட்டும் தனி நபராக போராடினார். மற்றவர்கள் கைவிட 1–2 என தொடரை இழந்தது. தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் இதே கதை தான். ஒவ்வொரு இன்னிங்சிலும் முடிந்தவரை சிறப்பான பேட்டிங்கை கோஹ்லி தருகிறார். இதுவரை 544 ரன் (சராசரி 68.00) எடுத்ததே இதற்கு சாட்சி. இவர் வீழ்ந்து விட்டால், மற்ற வீரர்களும் வரிசையாக கிளம்பி விடுகின்றனர். இதனால் வெல்ல வேண்டிய தொடரை 1–3 என கோட்டை விட்டது இந்தியா. 

ஆதரவு இல்லை: பேட்டிங்கில் கோஹ்லிக்கு சக வீரர்களிடம் இருந்த சரியான ஆதரவு கிடைக்கவில்லை. புஜாரா (241 ரன்), ரகானே (220) சற்று கைகொடுத்தனர். இதில் புஜாரா சதம் அடித்து இருந்தாலும், இவரது பேட்டிங் சாதாரணமாகத் தான் உள்ளது. 

* ரகானேவுக்கு பின் வரிசை வீரர்களை எப்படி ஒருங்கிணைத்து விளையாட வேண்டும் என்று தெளிவு இல்லை. 

* துவக்கத்தில் ஷிகர் தான் (3 டெஸ்ட், 158 ரன்), லோகேஷ் ராகுல் (113 ரன், 4 டெஸ்ட்) இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். 

* பின் வரிசை பேட்டிங் சொல்லவே தேவையில்லை. ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக்  பாண்ட்யா (164 ரன், 4 டெஸ்ட்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (43 ரன், 2 டெஸ்ட்) அரிய வாய்ப்பை வீணாக்கினர். இவர்கள் கொஞ்சம் தாக்குப்பிடித்து ரன் சேர்த்திருந்தால், சவுத்தாம்ப்டன டெஸ்டில் சாதித்திருக்கலாம். 

‘வேகம்’ போதுமா: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் மிரட்டுகின்றனர். இஷாந்த் சர்மா (15 விக்.,), முகமது ஷமி (14), உமேஷ் யாதவ் (3), பும்ரா (11), பாண்ட்யா (10) நம்பிக்கை தருகின்றனர்.

ஆனால் முக்கிய கட்டத்தில் கைவிடுகின்றனர். முதல் டெஸ்ட், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 87 /8 என இருந்தது, கடைசியில் 180 ரன்கள் எடுக்க விட, 31 ரன்னில் இந்தியா தோற்றது. 

இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 131/5 என இருந்து கடைசியில் 396/7 ஆனது. நான்காவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 86/6 ல் இருந்து 246 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 122/5 ல் இருந்து 271 ரன் சேர்க்க விட்டனர்.

‘வேஸ்ட்’ அஷ்வின்: இதில் பின் வரிசை வீரர்களை அவுட்டாக்குவதில் அஷ்வின் பங்கு சுத்தமாக இல்லை. அன்னியமண்ணில் இவர் சரிப்பட மாட்டார் என்ற கருத்தை நிரூபித்து வருகிறார். நான்காவது டெஸ்டில் மொத்தம் 3 விக்கெட் தான் வீழ்த்தினார். மாறாக இங்கிலாந்தின் மொயீன் அலி 9 விக்கெட் சாய்த்தார். 

டெஸ்ட் அரங்கில் சாம்பியனாக வலம் வர, அன்னியமண்ணில் திறமை நிரூபிப்பது அவசியம் என்பதை இந்திய வீரர்கள் உணர வேண்டும்.

 

மூலக்கதை