பாதிக்கிணறு தாண்டினால் போதுமா...: கேப்டன் கோஹ்லி ஆதங்கம் | செப்டம்பர் 03, 2018

தினமலர்  தினமலர்
பாதிக்கிணறு தாண்டினால் போதுமா...: கேப்டன் கோஹ்லி ஆதங்கம் | செப்டம்பர் 03, 2018

சவுத்தாம்ப்டன்: ‘‘அன்னிய மண்ணில் நன்றாக விளையாடினால் மட்டும் போதாது. நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக் கோட்டை கடக்க வேண்டும்,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 1–3 என தொடரை இழந்தது. இதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறியது:

நாம் 30 முதல் 50 ரன்கள் தான் குறைவாக எடுத்தோம் என போட்டி முடிந்ததும் கூறக் கூடாது. களத்தில் போதே அதை தெரிந்து கொண்டு ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். நாம் சிறப்பாகத் தான் விளையாடுகிறோம் எனத் தெரியும். ஆனால் இதையே திரும்பத் திரும்ப இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டிருப்பது. 

அன்னியமண்ணில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்கிறோம் என்று கூறினால் மட்டும் போதாது. போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து தோற்பதை விட, அந்த வெற்றிக் கோட்டை கடக்கும் கலையை கற்க வேண்டும். இதற்கான திறமை நம்மிடம் உள்ளது.

முன்னேற்றம் முக்கியம்

நெருக்கடியான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்து நாம் எதிரணியினரை எப்படி சமாளிக்கிறோம் என்பது குறித்து இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். போட்டியின் போது நமக்கு சாதகமாக நிலை ஏற்படும் போது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வேண்டும். மாறாக எதிரணியினர் மீண்டு வர அனுமதிக்கக் கூடாது. 

மீண்டும் மீண்டும் போராட வேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டு வந்தால் அதுகுறித்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டிங்காம் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தியதால் தான் வெற்றி பெற முடிந்தது. துணிச்சலான, பயமற்ற ஆட்டத்தை தொடரின் துவக்கத்தில் இருந்தே வெளிப்படுத்தியிருக்க வேண்டும். 

‘முதல்’ முக்கியம்

நீண்ட தொடரில் மீண்டு வந்திருந்தால் நல்லது. மாறாக மீள முடியாத நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் மிக முக்கியம். நான்காவது டெஸ்டில் நான் அவுட்டாகாமல் சற்று நீடித்து இருந்தால் முன்னிலை இன்னும் அதிகமாகி இருக்கும். 

தவிர சில சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ அமைந்திருந்தால் கூட போதும். நல்லவேளை புஜாரா தாக்குப்பிடித்ததால் 26 ரன் முன்னிலை கிடைத்தது. மற்றபடி எங்களால் முடிந்தவரை சிறப்பாகத்தான் விளையாடுகிறோம்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

எளிதாக முடியாது

கோஹ்லி கூறுகையில்,‘‘ மற்ற அணிகள் இந்தியாவில் விளையாடும் போது, எளதாக தோற்று விடுகின்றன. அதே அணிகள் அவர்களது சொந்த மண்ணில் எங்களை எளிதாக வெல்ல முடியாது. போராடினால் தான் வெற்றி கிடைக்கும். இது எங்களுக்கு பெரிய உற்சாகம் தருகிறது,’’ என்றார்.

முடிந்ததை செய்தார்

கோஹ்லி கூறுகையில்,‘‘ அஷ்வின் முடிந்தவரை சிறப்பாக பவுலிங் செய்தார். எதிர்பார்த்த விக்கெட் கிடைக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியதையும் கவனிக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை