நாளை 5வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், போப்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை 5வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், போப்

லண்டன்: ஓவலில் இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை இன்று இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இடது கை துவக்க ஆட்டக்காரர் கீடன் ஜென்னிங்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ஓலி போப் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.

1-3 என்ற கணக்கில் தொடரை கோட்டை விட்டுள்ள இந்திய அணி, வெற்றியுடன் தொடரை முடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

பிர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, லண்டனில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தியது.

இருப்பினும் நாட்டிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் எழுச்சியுடன் ஆடிய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சௌத்தாம்ப்டனில் நடந்த 4வது போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் அலிஸ்டர் குக், இத்தொடரோடு ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

160 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 12,254 ரன்கள் குவித்துள்ளார். 32 சதங்கள் மற்றும் 56 அரை சதங்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் இவர், கடந்த 2006ல் இந்திய அணியை எதிர்த்து, நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார்.இவரது கடைசி டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை ஓவலில் நடைபெற உள்ள 5வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் அடங்கிய பட்டியலை இன்று இங்கிலாந்து வெளியிட்டது.

இடது கை துவக்க ஆட்டக்காரர் கீடன் ஜென்னிங்ஸ் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அதன் விபரம் வருமாறு: இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜானி பெஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர், அலிஸ்டர் குக், சாம் கரன், கீடன் ஜென்னிங்ஸ், ஓலி போப், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் ஓக்ஸ்.

தொடரின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. தவிர அலிஸ்டர் குக்கின் கடைசி போட்டி என்பதால், அவருக்கு வெற்றியை பரிசளிக்க வேண்டும் என்று, இங்கிலாந்து அணியின் வீரர்கள் துடிப்புடன் உள்ளனர்.

‘‘வெற்றி வரை முன்னேற வேண்டும்’’ என்று இந்திய வீரர்களுக்கு கேப்டன் விராட் கோஹ்லி ஆலோசனை கொடுத்துள்ளார்.

சௌத்தாம்ப்டனில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில், குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் கை கொடுக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இங்கிலாந்து பயணத்தின் இறுதி போட்டி என்பதால், வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் நாளை களம் இறங்க உள்ளனர்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஹனுமா விஹாரியும், அஸ்வினுக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜாவும் நாளைய போட்டியில் ஆடுவார்கள் என இங்கிலாந்தில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை