அறந்தாங்கி அருகே பேரனை கொன்று மூதாட்டி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அறந்தாங்கி அருகே பேரனை கொன்று மூதாட்டி தற்கொலை

அறந்தாங்கி: புதுகை மாவட்டம் அறந்தாங்கி அருகே பரமாந்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி சொர்ணவள்ளி(65).

இவருக்கு பன்னீர்செல்வம், தங்கராசு என்ற மகன்கள் உள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்கள்.

மண் எடுக்க முடியாததால் இந்த ெதாழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். 2 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது.

மகன்கள் வீட்டருகிலே கூரை வீட்டில் சொர்ணவள்ளி வசித்து வருகிறார்.
மகன் தங்கராசுவின் மனைவி நாகேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் பேரன் பாண்டியை (9) சொர்ணவள்ளி பராமரித்து வந்தார்.

பாண்டி இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

குடிபழக்கம் உள்ள தங்கராசு சரிவர வேலைக்கு செல்லாமல் போதையில் இருந்து வந்ததால் வருவாயின்றி சொர்ணவள்ளி சிரமப்பட்டு வந்தார்.

நேற்று அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே புளிய மரத்தடியில் சொர்ணவள்ளி, பாண்டி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். அருகில் எலி விஷம் கிடந்தது.

அதைப்பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அறந்தாங்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு இன்று அதிகாலை பாட்டியும், பேரனும் அடுத்தடுத்து இறந்தனர்.

அறந்தாங்கி போலீசார் நடத்திய விசாரணையில், பேரனை பராமரித்து வந்த சொர்ணவள்ளிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனக்கு பின்னர் பேரனை யார் பார்ப்பார்கள் என அக்கம்பக்கத்தில் புலம்பி வந்துள்ளார்.

அப்படி தனக்கு முடியவில்லை என்றால் பேரனை கொன்றுவிட்டு தானும் இறந்து விடுவதாகவும் கூறினாராம். இந்நிலையில் சொர்ணவள்ளி பேரனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை