யுஎஸ் ஓபன் 2018 அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுஎஸ் ஓபன் 2018 அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் டென்னிசில் இன்று காலை பரபரப்பாக நடந்த காலிறுதி போட்டியில், ஆஸி. வீரர் ஜான் மில்மேனை வீழ்த்தி, நடப்பு விம்பிள்டன் சாம்பியன் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த ஆடவருக்கான ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை, 4 செட்களில் வீழ்த்தி, தர வரிசையில் 55வது இடத்தில் உள்ள ஜான் மில்மேன் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெற்றார். தனது 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறி வைத்து, யுஎஸ் ஓபனில் களம் இறங்கியுள்ள ஜோகோவிச்சை காலிறுதி போட்டியில் அவர் எதிர் கொண்டார்.

‘‘பெடரருடன் காலிறுதி போட்டி என எதிர்பார்த்திருந்தேன்.

ஜான் மில்மேன் 4வது சுற்றில் திறமையாக ஆடியதை பார்த்தேன்’’ என்று ஜோகோவிச் முன்னதாக அவரை பாராட்டியிருந்தார். இந்திய நேரப்படி இன்று காலை 6. 30 மணியளவில் ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் இருவருக்கும் இடையேயான காலிறுதி போட்டி துவங்கியது.

முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், 2வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார். 3வது செட்டிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கியிருந்தது.

அதையும் 6-4 என்ற கணக்கில் வென்ற அவர், இந்த வெற்றியின் மூலம் ஆடவர் ஒற்றையருக்கான அரையிறுதிக்கு 11வது முறையாக ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக நடந்த முதலாவது காலிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த கீ நிஷிகோரி, குரோஷிய வீரர் மரின் சிலிக்கை 5 செட்களில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு யுஎஸ் ஓபன் பைனலில், சிலிக்கிடம் கோப்பையை கோட்டை விட்டார் நிஷிகோரி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தோல்விக்கு இப்போது அவர் பழிதீர்த்துக் கொண்டார் என்றே ஜப்பான் ரசிகர்கள், அவரை கொண்டாடி வருகின்றனர். ‘என்னைப் பொறுத்தவரை சிலிக்குடனான போட்டி என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான்’என்று நிஷிகோரியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நிஷிகோரியிடம் தோல்வியடைந்த ஜோகோவிச், தற்போதும் அரையிறுதியில் அவருடனேயே மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகி, உக்ரைனின் லெசியா சுரென்கோவை 6-1, 6-1 என நேர் செட்களில் 58 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் முதன் முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒசாகி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால் ஜப்பான் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.


.

மூலக்கதை