காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்: பரூக் அப்துல்லா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்: பரூக் அப்துல்லா பேட்டி

ஸ்ரீநகர்:  காஷ்மீரில், 35ஏ சட்ட பிரிவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 2016ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும்.

அந்த சமயத்தில், தீவிரவாதி புர்ஹான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அக்டோபர் முதல் தேதியில் இருந்து 5ம் தேதி வரை நகராட்சி தேர்தலும், நவம்பர் 8ல் கிராம பஞ்சாயத்து தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதற்கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 35ஏ குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரிக்கப்பட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என மாநில கவர்னர், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

இதனால், இவ்வழக்கின் விசாரணை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.   இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, “35ஏ சட்ட பிரிவை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என்றார்.   உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள்   கோரிக்கை விடுத்த நிலையில், பரூக் அப்துல்லாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மூலக்கதை