கும்பமேளாவில் 15 கோடி பேர் பங்கேற்பார்கள்: யோகி ஆதித்யநாத் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்பமேளாவில் 15 கோடி பேர் பங்கேற்பார்கள்: யோகி ஆதித்யநாத் தகவல்

மும்பை: உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் சுமார் 15 கோடி பேர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா நிகழ்வு மிகவும் பிரபலம்.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கும்பமேளாவை காண திரள்வார்கள். வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி தொடங்கும் கும்பமேளாவுக்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கும்பமேளா தொடர்பான அனிமேஷன் வீடியோ துவக்க விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இதற்கு முன்பு நடந்த கும்பமேளா நிகழ்ச்சிக்கு 5000 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.தற்போது இது 10,000 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 12 கோடி பேர் பங்கேற்றனர்.

இந்தாண்டு 15 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சுமார் 6 லட்சம் கிராமங்களை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

கும்பமேளாவை இந்தாண்டு சிறப்பாகவும், பிரமாண்ட முறையிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள அலகாபாத் கோட்டை பகுதியில் உள்ள சரஸ்வதி ஆற்றில் பொதுமக்கள் விஷேச பூஜைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கும்பமேளாவின் போது அலகாபாத் கோட்டை திறந்துவிடப்படும்.
கும்பமேளாவில், வெளிநாட்டினரும் அதிகளவில் பங்கேற்கும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.   கும்பமேளா விழா மதம் சம்மந்தப்பட்டது கிடையாது.

நம்முடைய நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையிலான நிகழ்வாக இது அமையும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


.

மூலக்கதை