ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது ..

நான்காவதுவருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி பிரதேசத்தை நினைவூட்டும் விதமாக `வன்னி வீதி’ திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகரத்தின் பிரதிநிதியாகிய கரி ஆனந்தசங்கரிதான் கனடாவில் தை மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக நாடாளுமன்ற மசோதா மூலம் ஏகமனதாக நிறைவேற்றக் காரணமானவர். ஸ்காபரோ நகரமும் மார்க்கம் நகரமும் சந்திக்கும் வீதியின் போக்குவரத்தை நிறுத்தி, தமிழர் தெரு விழா இரண்டு நாள்கள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம். இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் பிரமாண்டமானதும் பிரமிப்பானதுமான சாதனை விழா, இந்தத் தமிழர் விழாதான். 

 

கடந்த வருடம் விழாவைத் தொடங்கி வைத்தது, தமிழர்களுக்கு மிகவும் அணுக்கமான, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள். இவர் விழாவைத் தொடங்கி வைத்ததும் அல்லாமல் சிலம்பாட்டத்தில் பங்குபற்றி சிலம்பாடியதை உலகத் தொலைக்காட்சிகள் பலவும் காட்டின. இம்முறை மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள், கவர்னர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்காற்றினர். இலக்கியவாதிகள், நாடகக்காரர்கள், இசை மற்றும் நடனத் துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர். பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து எனச் சகல கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் நாள், மெகா ட்யூனர்ஸ் குழுவுடன் திரைப்படப் பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை விருந்தும், அடுத்த நாள் அக்னி இசைக் குழுவினரின் நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. உணவுச் சாவடிகளுக்கும் சிறுவர்களுக்கான களியாட்டங்களுக்கும் குறைவில்லை. பிற நாட்டினர் கரும்பையும், பலாப்பழத்தையும், இளநீரையும், நுங்கையும் சுவைத்தது, பார்த்துக்கொண்டிருந்த நம் தமிழர்களுக்குக் கண்கொள்ளா விருந்து.

 

கனடியத் தமிழர் பேரவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அனைவருக்கும் அனுமதி இலவசம். பேரவையின் தலைவர் மருத்துவர் சாந்தகுமாரும், உபதலைவர் சிவன் இளங்கோவும் விழாவை ஆரம்பித்து வைத்தனர். விழா முடிவில் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு இயக்குநர் ஜோர்ஜெட் சினாட்டி, ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கவிருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். ஒப்பந்தம் கையொப்பமானதைக் குறிப்பிட்டு, கணிசமான தொகை ஏற்கெனவே திரட்டப்பட்டுவிட்ட நல்ல தகவலையும் சபையினரின் ஆரவாரத்துக்கிடையே பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சு நிகழும்போதே தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டலும் நடந்தது.

 

இந்த விழாவில் பயன் பெற்றவர்கள் முக்கியமாக இளைய தலைமுறையினர்தாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழைமையான தமிழ் இலக்கியம், பாரம்பார்ய கலைகள், நடனம், இசை, பண்பாடு பற்றிக் கற்றுக்கொண்டது அவர்களைப் பெருமை கொள்ள வைத்தது. பலவகையான கலாசாரம், பன்முகத்தன்மை ஆகிய கனடியப் பெறுமானங்களைத் தக்கவைக்கும் செயலாகவும், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் உலகமயமாக்கும் முயற்சியாகவும் இந்த விழா அமைந்ததுதான் இதன் வெற்றி. திரண்டிருந்த கூட்டம் அடுத்த விழா எப்போது என்று கேட்டது, பெரும் நம்பிக்கை தருவதாக அமைந்தது.

 

உண்மையில், இது தமிழர்களின் விழாவாக இருந்ததுடன் தமிழர்களின் பண்பாட்டையும் போற்றுவதாக இருந்தது.

 

-கனடாவிலிருந்து அ.முத்துலிங்கம் 

மூலக்கதை