தங்கம் வாங்கினாலும் எனது பொக்கிஷத்தை இழந்து விட்டேன்: கண்ணீர் விட்டு கதறி அழுத வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் வாங்கினாலும் எனது பொக்கிஷத்தை இழந்து விட்டேன்: கண்ணீர் விட்டு கதறி அழுத வீரர்

சண்டிகர்: ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தர்ஜிந்தர் பால்சிங், தமது தந்தை காலமான செய்தி கேட்டு மனமுடைந்து கதறி அழுத சம்பவம்  சோகத்தை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்தவர் தர்ஜிந்தர் பால்சிங்.   இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இவர் 20. 75 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தார்.

அப்போது நிருபர்கள்   அவரிடம் இது குறித்து கேட்ட போது   தர்ஜிந்தர்பால் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது  தந்தை கரம் சிங்கின் ஆசைகளை நிறைவேற்றப் போவதாக உணர்ச்சி மிகுதியுடன் பேசி இருந்தார்.

இந்த நிலையில் விளையாட்டுப்போட்டிகள் நிறைவடைந்து பதக்கம் மற்றும் பரிசுப்  பொருள்களுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசை, ஆசையாக நேற்று மாலை டெல்லி திரும்பிய அவருக்கு தந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவல் பேரிடியாக இருந்தது. உடனடியாக சொந்த ஊருக்கு அவர் விரைந்த நிலையில், கரம் சிங் காலமாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.



இந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து போன பால்சிங் கதறி அழுதுள்ளார். தங்கம் வென்றாலும்  வாழ்க்கையின் மிகப் பெரிய பொக்கிஷத்தை  இழந்து தவிப்பதாக கதறி அழுதது அவருடன் இருந்த சக வீரர்களையும்  கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

பால்சிங்  வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லாமல் இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நபர்கள் அவரது தந்தையின் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை