இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அலிஸ்டர் குக் ஓய்வில் செல்வதாக அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அலிஸ்டர் குக் ஓய்வில் செல்வதாக அறிவிப்பு

சவுதாம்டன்: கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரராக அறியப்படும் இங்கிலாந்து அணியின்  அலிஸ்டர் குக் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.   இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி போட்டியில் சதமடித்த இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் அலிஸ்டர் குக் அதற்கடுத்து ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இந்திய அணியுடன் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அலெஸ்டர் குக் தொடர்ந்து சொதப்பியதால் அவர் தானாக முன் வந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் வலுத்தது.

அலிஸ்டர் குக் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் இங்கிலாந்து அணி நிர்வாகம் அலிஸ்டர் குக்கிற்கு ஆதரவாகவே இருந்து வந்தது.

குறிப்பாக  இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் மற்றும் பயிற்சியாளர் பெலிஸ் உட்பட அனைவரும் அலிஸ்டர் குக்கிற்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.
இந்த நிலையில் அலிஸ்டர் குக் தற்போது திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். குக்கின் இந்த முடிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர், மேலும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் குக்கிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


.

மூலக்கதை