சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் குடும்பம் பிரிந்தது

PARIS TAMIL  PARIS TAMIL
சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் குடும்பம் பிரிந்தது

 பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் ஒன்றாக இருந்த சாவித்திரியின் குடும்பம் படத்தால் பிரிந்துவிட்டது.

 
படம் வெளிவந்ததும் சாவித்திரி மகன் சதீஷ், "அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று கூறினார். மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், "எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
 
 
 
ஆனால் ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், "என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது.
 
என்னையும், என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' என்று கோபமாகச் சொன்னார்.
 
 
 
இதுபற்றி விஜய சாமுண்டீஸ்வரியிடம் கேட்டபோது "பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம். நிச்சயம் சரியாகிடும்'' என்றார். 

மூலக்கதை