வண்ணமயமான நிறைவு விழா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் இந்தியா புதிய சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வண்ணமயமான நிறைவு விழா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் இந்தியா புதிய சாதனை

ஜகார்தா: இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன்  நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.    
இதுவரை இல்லாத அளவுக்கு 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப்  பட்டியலில் 8வது  இடம் பிடித்து ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. சீன அணி 132 தங்கம் உட்பட 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

ஜப்பான், தென் கொரியா ஆகியவை, இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்தன. மாலையில் நடைபெற்ற வண்ணமயமான நிறைவு விழாவில், மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க இந்திய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக அணிவகுத்தனர்.


 
சித்தார்த், டெனடா இணைந்து பாடிய பிரபல இந்தி திரைப்பட பாடல்களுக்கு நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் உட்பட ஏராளமான பிரபலங்கள் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அடுத்து நடைபெற உள்ள  19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் 2022ல் சீனாவின் ஹாங்ஸூ நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான தீபமும், கொடியும் சீன பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதக்கங்களை வாங்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பும் வீரர்களுக்கு அந்த அந்த மாநில அரசுகள் வரவேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.

.

மூலக்கதை