தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? சந்திரசேகர் ராவ் பரபரப்பு தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? சந்திரசேகர் ராவ் பரபரப்பு தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆளுங்கட்சி சார்பில் நேற்று ஐதராபாத் அருகே ‘பிரகதி நிவேதனா சபா’ என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்த தகவலை முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டத்தில் பேசிய அவர் முன்கூட்டிய தேர்தல் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை. அவர் கூறுகையில், ‘சந்திரசேகர் ராவ், மாநில அரசை கலைக்கப்போவதாக சில ஊடகங்கள் கூறி வருகின்றன. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளனர். அப்படி ஒரு முடிவு (முன்கூட்டியே தேர்தல்) எடுக்கும் போது நான் அறிவிப்பேன். மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே அது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், மக்கள் தங்கள் சொந்த தலைவர்கள் மூலம் மாநிலத்தை ஆண்டு வருவதாக கூறிய சந்திரசேகர் ராவ், அதைப்போல தாங்களும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்றும், டெல்லி தலைமைக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.

மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய 40 லட்சம் கையேடுகளை டி.ஆர்.எஸ். கட்சி அச்சிட்டு உள்ளது. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இந்த கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்த கையேட்டில் உள்ள திட்டங்கள் அடுத்த தேர்தலில் தங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை