ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய சாதனை: இன்று நிறைவு விழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய சாதனை: இன்று நிறைவு விழா

ஜகார்தா: ஆசிய விளையாட்டுப்போட்டி நிறைவு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த போட்டித்தொடரில் இந்தியா பதக்கம் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

நிறைவு விழாவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்கிறார்.
இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த 18ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. 18வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை குவித்து புதிய  சாதனை படைத்து உச்சம் தொட்டுள்ளது. ஆண்கள் குத்துச்சண்டை லைட் பிளை (49 கிலோ) எடை பிரிவு பைனலில் ஒலிம்பிக் சாம்பியன் ஹசன்பாய் துஸ்மதோவுடன் (உஸ்பெகிஸ்தான்) நேற்று மோதிய இந்திய வீரர் அமித் பாங்கல் (22 வயது) அபாரமாக செயல்பட்டு 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

முதல் முறையாகப் பங்கேற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலேயே ராணுவ வீரரான அமித் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரிட்ஜ் சீட்டுக்கட்டு விளையாட்டு ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணாப் பரதன் - சர்க்கார் ஷிப்நாத் இணை தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் சீனா வெள்ளிப் பதக்கமும், இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் அணிகள் வெண்கலமும் வென்றன.

மகளிர் ஸ்குவாஷ் குழு பிரிவு பைனலில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா கார்த்திக், சுனன்யா குருவில்லா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-2 என்ற கணக்கில் ஹாங்காங் (சீனா) அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. அமித் பாங்கல் வென்ற தங்கத்துடன் பதக்க பட்டியலில் 65 என்ற எண்ணிக்கையை கடந்த இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்தது.

முன்னதாக 2010ம் ஆண்டு சீனாவின் குவாங்ஸூ நகரில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 65 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று நிறைவு நாள் விழா கோலாகலமாக நடக்கிறது.

இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்தார்.   உலக ஹாக்கி சம்மேளன தலைவராகவும் பத்ரா உள்ளார். ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றார்.

இவர் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்தார்.


.

மூலக்கதை