ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11ம் நாள் முடிவில் 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11ம் நாள் முடிவில் 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11ம் நாளான நேற்று இந்தியா 11வது தங்கத்தை வென்றுள்ளது. இந்தோனேசியாவின் பாலம்பெங், ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தமிழகத்தின் சரத்கமல், மணிகா பர்தா இணை, அரையிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய இணை 11-9, 11-5, 11-13, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் போராடி தோற்றது.

இதனால் இந்திய அணியினர் வெண்கல பதக்கத்தை பெற்றனர். ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.மகளிருக்கான 200 மீட்டர் இறுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் டூட்டி சந்த் 23. 20 வினாடிகளில் பந்தயதூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த போட்டியில் பக்ரைன் வீராங்கனை எடிடியாங் 22. 96 வினாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார்.

டூட்டி சந்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான மும்முறை தாண்டும் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16. 77 மீட்டர்கள் தாண்டி முதலிடத்தை பிடித்தார்.

இதன் மூலம் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

குத்துச் சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி சுற்றில் இந்தியாவின் அமித் பங்கல் வட கொரியாவின் கிம் ஜாங்கை ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதே போன்று 75 கிலோ  எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், சீன வீரரை  மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இதனிடையே மகளிருக்கான ஹாக்கி போட்டியின் அரையிறுதிச் சுற்றில்  இந்திய அணி, சீன அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது. இதனிடையே இந்திய அணி 11வது நாள் முடிவில் 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் என மொத்தம் 54 பதக்கங்களை குவித்து பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய போட்டி வரலாற்றில் இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

இந்தப் பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை பூர்ணிமா ஹெம்பரம் 5837 புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். நேற்று கிடைத்துள்ள 2 தங்கப் பதக்கங்கள் உட்பட தடகளத்தில் மட்டும் இந்தியா இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டு கால வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கும் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இந்தியா இந்த பெருமையைப் பெற்றிருக்கிறது.பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டுட்டி சந்த் 23. 20 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தத் தொடரில் டுட்டி சந்த் கைப்பற்றும் இரண்டாவது பதக்கமாகும்.

முன்னதாக 100 மீட்டர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
ஆசிய போட்டிகளில் 4 x 400 மீட்டர் தடகளத்தின் ரிலே பிரிவில் இந்தியா சார்பில் முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், ஹீமா தாஸ், பூவம்மா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர். இந்தப் போட்டியில் முதலிடத்தை பிடித்த பஹ்ரைன் வீராங்கனை, கோலை மூன்றாவது முறையாக மாற்றும்போது இந்திய ஓடுதளத்தில் விழுந்தார்.

இது ஹிமா தாஸின் வேகத்துக்கு பின்னடைவாக அமைந்ததாக இந்திய தடகள சம்மேளனம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை