பைனலில் இந்தியா ‘பி’ அணி | ஆகஸ்ட் 27, 2018

தினமலர்  தினமலர்
பைனலில் இந்தியா ‘பி’ அணி | ஆகஸ்ட் 27, 2018

பெங்களூரு: நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் பைனலுக்கு இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் முன்னேறின.

பெங்களூருவில், நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கின்றன.

மணிஷ் சதம்: இதன் லீக் போட்டியில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. இந்தியா ‘பி’ அணிக்கு மயங்க் அகர்வால் (36), இஷான் கிஷான் (31) நல்ல துவக்கம் தந்தனர். சுப்மன் கில் (4), கேதர் ஜாதவ் (5) ஏமாற்றினர். தீபக் ஹூடா (30) ஓரளவு ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் மணிஷ் பாண்டே சதம் கடந்தார்.

இந்தியா ‘பி’ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (117), ஸ்ரேயாஸ் கோபால் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

கவாஜா கலக்கல்: பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அசத்தலாக ஆடிய உஸ்மான் கவாஜா (101*) சதம் கடந்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஜாக் வில்டர்முத் (62*) அரைசதமடித்தார்.

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா ‘ஏ’ ஏமாற்றம்

மற்றொரு லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் (36), தீபக் சகார் (38) ஆறுதல் தர இந்தியா ‘ஏ’ அணி 37.3 ஓவரில் 157 ரன்னுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு பீட்டர் மாலன் (47) நம்பிக்கை தர, 37.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பைனலில் இந்தியா ‘பி’

லீக் சுற்றின் முடிவில் தலா 12 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் பைனலுக்கு (ஆக. 29) முன்னேறின. தலா 9 புள்ளிகளுடன் இந்தியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிகள் 3வது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளன.

மூலக்கதை