சச்சினை நெருங்கும் கேப்டன் கோஹ்லி: சாக்லைன் முஷ்தாக் கணிப்பு | ஆகஸ்ட் 27, 2018

தினமலர்  தினமலர்
சச்சினை நெருங்கும் கேப்டன் கோஹ்லி: சாக்லைன் முஷ்தாக் கணிப்பு | ஆகஸ்ட் 27, 2018

சவுத்தாம்ப்டன்: ‘‘ஜாம்பவான் சச்சினின் சாதனைகளை நெருங்கும் வாய்ப்பு இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு மட்டுமே உள்ளது,’’ என, முன்னாள் பாகிஸ்தான் சுழல் வீரர் சாக்லைன் முஷ்தாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 1–2 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 30ல் சவுத்தாம்ப்டனில்  துவங்குகிறது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 3 டெஸ்டில், 2 சதம், 2 அரைசதம் உட்பட 440 ரன்கள் குவித்துள்ளார். இவர், விரைவில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனைகளை நெருங்குவார் என, இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகரான பாகிஸ்தனை சேர்ந்த சாக்லைன் முஷ்தாக் கணித்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியது: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின். இவரை வேறு எந்த ஒரு வீரருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் தற்போதுள்ள வீரர்களில் இவரது சாதனையை நெருங்கும் வாய்ப்பு இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு மட்டுமே உள்ளது.

கடந்த 3 டெஸ்டில் கோஹ்லியின் ‘பேட்டிங்’ இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இத்தொடர் இங்கிலாந்து அணிக்கும், கோஹ்லிக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. ரன்னுக்காகவும், அணியின் வெற்றிக்காகவும் இவரது போராடும் குணம் பாராட்டுக்குரியது. இவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்திவிட்டால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சுலபமாகிவிடும்.

மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன்மூலம் உலகின் ‘நம்பர்–1’ அணி என்பதை இந்திய அணி நிரூபித்துள்ளது. மீதமுள்ள டெஸ்டில் கோஹ்லியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் இங்கிலாந்தின் வெற்றி அடங்கியுள்ளது.

இவ்வாறு சாக்லைன் முஷ்தாக் கூறினார்.

மூலக்கதை