ஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்

தினகரன்  தினகரன்
ஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்

சென்னை:  ஏரிகளில் மறுபுனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே புனரமைப்பு பணிகள் நடந்து 5 ஆண்டுகள் முடிந்துள்ளது என்ற பொதுப்பணித்துறையின் சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று பொதுப்பணித்துறை தலைமை உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 39,202 ஏரிகள் உள்ளன. இதில், 14095 ஏரிகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுபாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், ஏரிகள் தனது முழு நீர் கொள்ளளவை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஏரிகளில் மதகுகள், கரை பகுதிகள் கடுமையாக சேதமடைந்திருப்பதால், அவற்றை புனரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த ஏரிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் புனரைமக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஆர்ஆர்ஆர் திட்டம், குடிமராமத்து திட்டம், நீர்வளநிலவள திட்டத்தின் கீழ் அந்த ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக  நீர்வள,நிலவள திட்டத்தில் 5 ஆயிரம் ஏரிகள், குடிமராமத்து திட்டத்தில் 1513 ஏரிகள், ஆர்ஆர்ஆர் திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக நீர்வள, நிலவள திட்டத்தில் 4,700 ஏரிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 1511 ஏரிகள், 3வது கட்டமாக 2,500 ஏரிகள் புனரமைக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே, பல்வேறு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஏரிகளில் மீண்டும் இத்திட்டத்தின் கீழ் புனரமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை தான் புனரமைப்பு பணி மேற்கொண்ட ஏரிகளையே மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. நீர்வள,நிலவள திட்டத்தின் கீழ் இது போன்று 2 ஆண்டுகளுக்கு முன் புனரமைக்கப்பட்ட 1,500க்கு மேற்பட்ட ஏரிகளை தற்போது அதே திட்டத்தின் கீழ் புனரமைக்க தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏரிகள் புனரமைப்பு பணி செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் மட்டுமே ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை தலைமைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து புனரமைப்பு பணி செய்து 5 ஆண்டுகளுக்கு ேமல் ஆகியிருந்தால், இதற்காக, அந்தந்த மண்டல தலைமை பொறியாளர்கள் மூலம்  சான்றிதழ் பெற்று பொதுப்பணித்துறை தலைமைக்கு தர வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, பொதுப்பணித்துறையில் 2 முதல் 3 ஆண்டுகள் ஆன ஏரிகளை கூட புனரமைக்க வேண்டி ஒப்புதல் கேட்டு பொறியாளர்கள் அறிக்கை அனுப்பி வைக்கின்றனர். அந்த ஏரிகளை மீண்டும் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். இந்த நிலை தொடரக்கூடாது என்பதால் ஏரிகளை புனரமைத்து 5 ஆண்டுகள் ஆனதாக சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஏரிகளை புனரமைப்பதற்கு வழி ஏற்படும். இதன் மூலம் ஊழல் அதிகாரிகளின் செயல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

மூலக்கதை