மழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி

திருவனநதபுரம்: கேரளாவில் கனமழைக்கு நேற்று ஒரே நாளில் மேலும் 20 பேர் பலியானார்கள். செங்கனூர் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாக தெரிகிறது.

அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கோரத் தாண்டவமாடிய மழை நேற்று சற்று குறைந்தது. நேற்று இடுக்கி, வயநாடு உள்பட ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது.

இதனால் ஆலுவா, சாலக்குடி உள்பட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. ஆனாலும் செங்கனூர், வெண்மணி, தாண்டநாடு உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் வெள்ளம் குறையவில்லை.இந்த பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவது தெரிய வந்துள்ளது. ஏராளமானோர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இப்போதும் வீட்டு மொட்டை மாடியில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 3 மாத குழந்தை முதல் 97 வயது முதியவர் வரை உள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் முப்படைகளும் இன்றும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கனமழைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் 10 பேரும், ஆலப்புழா மாவட்டத்தில் 8 பேரும் அடங்குவர். கடந்த 6 நாளில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 270 ஐ தாண்டியுள்ளது.

தற்போது வரை பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரில் வீட்டின் மொட்டை மாடியில் சிக்கி தவித்த அசோகன்(75), கடந்த 5 நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகாமில் 7. 5 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இப்போதைக்கு வீடு திரும்ப முடியாத நிலை நிலவுகிறது. கேரளாவில் ரயில் போக்குவரத்து இன்றும் சீராகவில்லை.

திருவனந்தபுரம்- எர்ணாகுளம் இடையே ஆலப்புழா,கோட்டயம் வழியாக பாசஞ்சர் ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதேபோல் சொரணூர் - பாலக்காடு இடையே பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக கொச்சியில் இருந்து விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பூட்டு உடைப்பு
திருச்சூரில் கலெக்டர்  அலுவலகம் உள்பட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு  வருகின்றன.

இந்த வளாகத்தில் தான் திருச்சூர் மாவட்ட பார் அசோசியேஷன்  செயல்பட்டு வருகிறது. வெள்ள நிவாரணத்திற்காக வரும் பொருட்கள் அனைத்தும்  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  நேற்று தமிழ்நாட்டில் இருந்து ஒரு லாரியில் 10 டன் அளவில் அரிசி உள்பட  ஏராளமான பொருட்கள் வந்தது. அனால் அவற்றை வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.   ஆனால் பார் அசோசியேஷனுக்கு சொந்தமான அறை மட்டுமே காலியாக இருந்தது.   இதையடுத்து அந்த அறையை விட்டு தருமாறு கலெக்டர் அனுபமா பார் அசோசியேஷன்  தலைவர் ஜோசுவை கேட்டுகொண்டார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாக  கூறப்படுகிறது.

பல முறை கூறியும் அறை ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து பார்  அசோசியேஷன் பூட்டை உடைத்து பொருட்களை உள்ளே வைக்குமாறு கலெக்டர்  உத்தரவிட்டார்.

இதையடுத்து பார் அயோசியேஷன் அறை பூட்டு உடைக்கப்பட்டு  நிவாரண பொருட்கள் வைக்கப்பட்டது.

நிதி உதவி குவிகிறது
வெள்ளத்தால் சிக்கி தவித்து வரும் கேரளாவுக்கு பெரும்பாலான மாநிலங்களும், வெளிநாடுகளும், தனியார் நிறுவனங்களும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர். இதுவரை ரூ. 450 கோடி நிதி நிவாரண உதவி தருவதாக பல்வேறு தரப்பினரும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதில் அரசின் வங்கி கணக்கில் ரூ. 164 கோடி வரை வந்துள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கொச்சி நகர மேயர் சவுமினி ஜெயின் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் முழுவதையும் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

புதுப்பெண் நிவாரண நிதி
கண்ணூர் காப்பினிசேரியை சேர்ந்தவர் கண்ணன்.

இவரது மகள் ஷூஜினா. இவருக்கும் தளிப்பரம்பு பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

ஷூஜினா திருமணத்திற்கு தனக்கு கிடைத்த 2 பவுன் தங்க வளையலை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கினார்.

.

மூலக்கதை