கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக நேற்று மட்டும் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்ட ரயில்கள் என மொத்தம் 27 ரயில்கள் முழுமையாகவும், 12 ரயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி-கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில், எர்ணாகுளம் - படான் விரைவு ரயில், கோழிக்கோடு-திரிசூர் பயணிகள் ரயில் மற்றும் சோரனூர் - எர்ணாகுளம் பயணிகள் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு இன்று மாலை 6.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவசர காலங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி விளம்பரங்கள் மூலம் தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்கள், நிதியுதவிகள் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி, கத்தார் அரசு ரூ.35 கோடி என பல்வேறு மாநில அரசுகளும் நிதிகள் அளித்துள்ளனர். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதேபோல் நடிகை, நடிகைகள், தன்னார்வலர்கள் என பல்வேறு நபர்கள் தொடர்ந்து நிதிகள் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன்கள், ரயில்களில் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதேபோல் கேரளாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு நாள் படகு மூலம் செய்யப்பட்ட சேவைக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீட்புப் பணியின் போது ஏற்பட்ட படகு பழுதுகளின் செலவையும் அரசு ஏற்கும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை