கேரளாவிற்கு கூடுதலாக மீட்பு படைகள்: மத்திய அரசு முடிவு

தினமலர்  தினமலர்
கேரளாவிற்கு கூடுதலாக மீட்பு படைகள்: மத்திய அரசு முடிவு

கொச்சி : கொட்டி தீர்க்கும் கனமழை, வெள்ளத்தால் கேரளா மாநிலமே புரட்டி போடப்பட்டுள்ளது. மழை மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளனர்.


ஆலோசனை:

கேரளாவில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்து மத்திய உள்துறை செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீட்புபணிகளை மேற்கொள்ள, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்களை கூடுதலாக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானம்மூலம் மீட்பு

கேரளாவில் பதனம்திட்டா மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை வீரர்கள் கயிறு மூலம் மீட்டு விமானத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். திரிச்சூர் மாவட்டம் அரட்டுபுழா கிராமத்தில், இந்திய திபெத்திய எல்லை போலீசார், மீட்புபணியில் ஈடுபட்டனர்.

12 மாவட்டங்கள் பாதிப்பு

மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில், கேரளாவில் 12 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 1924ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும். பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அளவு இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

கிராமங்கள் பாதிப்பு

கேரளாவில் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். உதவுவதாக அவர்கள் கூறியுள்ளனர். கூடுதலாக ஹெலிகாப்டர்கள் மீட்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாலக்காடு நென்மாறை போத்துண்டி அருகே நில சரிவு ஏற்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் சிலர் மண்ணில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஓர்கடவு கிராமத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்தில் மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் மிக அதிக அளவிலான கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ., தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொச்சியில் பல இடங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நாளாக கேரளா செல்லும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் புனலூர், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குமரி வழியாக கேரளா செல்லும் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை