ஏழுமலையான் கோயில் மகா கும்பாபிஷேகம்: ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏழுமலையான் கோயில் மகா கும்பாபிஷேகம்: ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்றுகாலை நடந்தது. கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கலியுக கடவுளாக விளங்கி வரும் ஏழுமலையான், 7 மலைகள் கொண்ட திருமலையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் இவரது பக்தர்கள் உள்ளனர்.

இவர்கள் ஏழுமலையானை வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு உலக புகழ்பெற்றுள்ள ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் (சம்ப்ரோக்‌ஷனம்) இன்று காலை நடந்தது.

இதையொட்டி கடந்த 11ம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் பூஜைகள் தொடங்கியது. 12ம் தேதி யாக சாலையில் மூலவர், வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மாநிலத்தில் இருந்து 44 ரூத்விக்குகள், 100 தேவ பண்டிதர்கள் மற்றும் வேத பாட சாலை மாணவர்கள் முன்னிலையில் யாகசாலையில் வைக்கப்பட்ட மூலவர்களின் கும்பத்திற்கு சிறப்பு யாகமும், பூஜைகளும் நடைபெற்றது.

2வது நாளான 13ம் தேதி மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அதேபோல் தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

3வது நாளான நேற்று முன்தினம் அஷ்டபந்தனம் சமர்ப்பணம் நடந்தது. 4ம் நாளான நேற்று புண்ணியாகவாசனம் வாஸ்து யாகம், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதைதொடர்ந்து மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், இரவு பூர்ணாஹூதியும் நடந்தது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 10. 16 மணி முதல் பகல் 12 மணிக்கு இடையே யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசம், மேளதாளம் முழங்க எடுத்து செல்லப்பட்டு வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நாடெங்கும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2030ம் ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெறும்.

இன்று நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்பனம், சேனாதிபதி உற்சவம் தொடங்கிய 11ம் தேதி முதல் நேற்று இரவு வரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 260 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்கள் உண்டியலில் ரூ. 4. 79 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நேரத்தில் மராமத்து பணிகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் அனுமதிக்க முடியாது என தேவஸ்தானம் தெரிவித்தது. பின்னர் 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக திருமலையில் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு நாள்தோறும் ரூ. 6 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


.

மூலக்கதை