இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லியை மட்டுமே நம்பியுள்ளதா? சங்கக்கரா மறுப்பு

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லியை மட்டுமே நம்பியுள்ளதா? சங்கக்கரா மறுப்பு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கோஹ்லியை மட்டுமே நம்பியிருப்பதாக சொல்வது தவறு என்று இலங்கை அணி முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா கூறியுள்ளார்.இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவியது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கும், 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கும் சுருண்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக விளங்கும் இந்திய அணி, பேட்டிங்கில் கேப்டன் விராத் கோஹ்லியை மட்டுமே அதிகம் நம்பியிருப்பதே இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியை சந்திப்பதற்கு காரணம் என கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு தவறானது என சங்கக்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:கோஹ்லி தலைசிறந்த வீரர். கடந்த சில ஆண்டுகளாக அவரது ஆட்டம் பிரமிக்க வைப்பதாக உள்ளதை அனைவரும் பார்த்து வருகிறோம். அதே சமயம், இந்திய அணி ரன் குவிப்புக்கு அவரை மட்டுமே சார்ந்துள்ளதாகக் கூறுவது தவறான கருத்து. புஜாரா, ரகானே இருவரும் உண்மையிலேயே சிறந்த வீரர்கள். புஜாராவின் டெஸ்ட் சராசரி 50 ரன்னாக உள்ளது. ரகானே அன்னிய மைதானங்களில் சராசரியாக 50 ரன்னுக்கும் அதிகமாகவே எடுத்துள்ளதை மறந்துவிடக் கூடாது. முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் திறமையான பேட்ஸ்மேன்கள் தான். இவர்கள் இங்கிலாந்து மண்ணில் ரன் குவிக்க முடியாமல் திணறுவதற்கு முக்கிய காரணம், இந்த சவாலுக்கு போதுமான அளவு தயாராகவில்லை என்பது தான். இது போன்ற கடினமான தொடர்களுக்கு முன்பாக பயிற்சி முகாம் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பது அவசியம். அதில் கோட்டைவிட்டதே தற்போதைய தடுமாற்றத்துக்கு காரணம். மேலும், லார்ட்ஸ் ஆடுகளம் மற்றும் சூழலை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தியா டாசில் தோற்றதும் தோல்விக்கு வழிவகுத்துவிட்டது. வீரர்கள் தேர்விலும் தவறு செய்துவிட்டனர். பர்மிங்காம் தோல்வியை மனதில் வைத்து இரண்டு ஸ்பின்னர்களை சேர்த்தது பின்னடைவாக அமைந்தது. லார்ட்ய்ஸ் போட்டிக்கும் அதே அணியுடன் களமிறங்கி இருக்கலாம்.  இவ்வாறு சங்கக்கரா கூறியுள்ளார். இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் நாட்டிங்காமில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

மூலக்கதை