இலங்கைக்கு எதிரான தொடரை வென்றும் தரவரிசையில் 4ம் இடத்துக்கு பின்தங்கியது தென் ஆப்ரிக்கா

தினகரன்  தினகரன்
இலங்கைக்கு எதிரான தொடரை வென்றும் தரவரிசையில் 4ம் இடத்துக்கு பின்தங்கியது தென் ஆப்ரிக்கா

கொழும்பு: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி ரேங்கிங் பட்டியலில் 4ம் இடத்துக்கு பின்தங்கியது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 4வது போட்டியில்  தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்த நிலையில் கடைசி போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 97 ரன்னுடன் (97 பந்து) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.300 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 24.4 ஓவரில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சிறப்பாக பந்துவீசிய இலங்கையின் தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக தனஞ்ஜெயாவும், தொடர் நாயகனாக டுமினியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்ததாக இரு அணிகளும் ஒரு டி20 போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.ஒருநாள் தொடர் முடிந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், தென் ஆப்ரிக்கா 110 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஒருநாள் தொடர் துவங்கும் முன்பாக தென் ஆப்ரிக்கா 113 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை 3 புள்ளிகள் கூடுதலாக பெற்று 80 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.முதல் இடத்தில் இங்கிலாந்தும் (127 புள்ளி), 2வது இடத்திலும் இந்தியாவும் (121 புள்ளி) உள்ளன. 5வது இடத்தில் பாகிஸ்தான் (104), 6வது இடத்தில் ஆஸ்திரேலியா (100), 7வது இடத்தில் வங்கதேசம் (92), 9வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (69), 10வது இடத்தில் ஆப்கானிஸ்தான் (63) ஆகிய அணிகள் உள்ளன.

மூலக்கதை