அமெரிக்காவுடன் போர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கு இடமில்லை: ஈரான் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுடன் போர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கு இடமில்லை: ஈரான் திட்டவட்டம்

தெஹ்ரான்: அமெரிக்காவுடன் போருக்கோ, பேச்சுவார்த்தைக்கோ செல்ல மாட்டோம் என்று ஈரான் நாட்டுத் தலைவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் தலைவர் அயாத்துல்லா அலி கமேனீ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், போர் அல்லது பேச்சுவார்த்தை என அமெரிக்கா கூறிவருவதாக குறிப்பிட்டார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெறாது என்றும் அதே சமயம் பேச்சுவார்த்தைக்கும் தாங்கள் செல்ல மாட்டோம் என்றும் கூறினார். இந்நிலையில், ராடார் கண்காணிப்புக்கு உட்படாத குறுகிய தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அமிர் ஹட்டாமி கூறியுள்ளார். இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்துவந்த  மோதல் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை