தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா.? - ரஜினி காட்டம்

தினமலர்  தினமலர்
தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா.?  ரஜினி காட்டம்

சென்னை : திமுக., தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்களில் தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். கருணாநிதியின் உருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது : கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளில் எவ்வளவு சோதனைகள், சூழ்ச்சிகள். எல்லாவற்றையும் வென்று திமுக., தலைவராக இருந்தவர். இவரால் அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர். என்னுடன் நட்பு கொள், இல்லையென்றால் என்னை எதிரியாக்கி கொள் என தமிழகத்தில் அரசியல் சதுரங்கம் செய்தவர்.

அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு, திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால், அதிமுக., உருவானதே கருணாநிதியால் தான். எம்ஜிஆர்., சிவாஜி இருவரையும் சூப்பர் ஸ்டாராக்கியவர்.

கருணாநிதியின் இறுதிச்சடங்கில் எத்தனை மாநில முதல்வர்கள் பங்கேற்றார்கள். ஒட்டுமொத்த இந்தியாவே பங்கேற்றது. ராணுவம் மரியாதை செய்தது. அந்த இடத்தில் தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா. அமைர்ச்சர்கள் இருக்க வேண்டாமா.?, மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா இல்லை அவர்களை விட பெரும் தலைவர்களா.? இந்த எதிரிகள் எல்லாம் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் முடிந்துபோய்விட்டது. இனி வேண்டாம்.

மெரினாவில் இடம் கொடுத்தீர்கள். நல்லவேளை நீங்கள்(அரசு) மேல் முறையீடு செய்யவில்லை. இல்லையென்றால் நானே இறங்கி போராடி இருப்பேன். ஸ்டாலின், அந்த இடத்தில் கண் கலங்கியதை பார்த்து நானே கலங்கிவிட்டேன். நீங்கள், கவலைப்படாதீர்கள், உங்களுடன் உங்கள் அப்பா இருப்பார், கழக தொண்டர்கள், உடன்பிறப்புகள் இருப்பார்கள்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

மூலக்கதை