'காலா' வழியில் 'விஸ்வரூபம் 2' ?

தினமலர்  தினமலர்
காலா வழியில் விஸ்வரூபம் 2 ?

தமிழில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் என்றால் அதை உடனேயே தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுவிட வேண்டும். கேரளாவில், டப்பிங் கூட செய்யாமல் நேரடியாகவே வெளியிட்டு வசூலைப் பார்த்துவிட வேண்டும். கர்நாடகாவில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியிட்டுவிடலாம். இப்படி வெளியிட்டு தென்னிந்திய ஸ்டார் ஆகும் சில நடிகர்களின் படங்களும், இவற்றோடு சேர்த்து வட இந்தியாவிலும் வெளியிட்டு இந்திய ஸ்டார் ஆன சில மூத்த நடிகர்களின் படங்களும் சமீப காலத்தில் தோல்வியைத் தழுவுகின்றன.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழைத் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் படம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும், தமிழில் படம் வெற்றிப் படம் என தயாரிப்பாளர் அறிவித்தார். 'காலா' எப்படி தெலுங்கு, ஹிந்தியில் படுதோல்வி அடைந்ததோ அதே வழியில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள 'விஸ்வரூபம் 2' சென்று கொண்டிருக்கிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி வெளியீட்டால் சுமார் 25 கோடியும், தெலுங்கு வெளியீட்டால் சுமார் 10 கோடி வரையிலும் நஷ்டம் வரும் என்கிறார்கள்.

படத்தின் திரைக்கதை குழப்பமாக இருந்ததே படத்தின் மோசமான வரவேற்புக்கு ஒரு காரணம் என்று பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால், படத்தில் '22 கட்டுகள்' தணிக்கைக் குழுவால் கொடுக்கப்பட்டதே திரைக்கதை குழப்பத்தின் விளைவு என்று திரையுலகத்தில் சொல்கிறார்கள்.

ஷங்கரின் '2.0' வந்து எப்படி ரஜினியைக் காப்பாற்றப் போகிறதோ அதே போல ஷங்கரின் 'இந்தியன் 2' வந்து கமல்ஹாசனைக் காப்பாற்றிவிடும் என்றும் திரையுலகத்தில் குரல் கேட்கிறது.

மூலக்கதை