கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு

தினமலர்  தினமலர்
கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு

தர்மபுரி : கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து 80,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 9000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 33வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் மீண்டும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் வந்த காவிரி நீர் :

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மூலக்கதை