கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை; சாலைகள், தண்டவாளம் துண்டிப்பு; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை; சாலைகள், தண்டவாளம் துண்டிப்பு; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொட்டி வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. எர்ணாகுளம், ஆழப்புலா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. பல இடங்கள் ஆறுகளாக காட்சியளிக்கின்றன. மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் நிலப்பூரில் முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி, மற்றும் வயநாட்டில் ராணுவத்தினர் தலா 75 பேர் கொண்ட 6 குழுக்களாக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளபாதிப்புகள் கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை