கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்வு : மீட்பு, நிவாரணப் பணிகளில் முப்படைகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு : மீட்பு, நிவாரணப் பணிகளில் முப்படைகள் தீவிரம்

திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது.பல இடங்களில் வீதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மழை தொடர்வதால் இடுக்கி அணை நிரம்புகிறது. இதையடுத்து அதன் ஒருபகுதியான சிறுதோணி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளது. வயநாடு கண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்கிறது. கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மீளாத நிலையில் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதையடுத்து முப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

மூலக்கதை