மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!

மானிய விலையில் காஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

சிவகாசி, நாராயணபுரத்தை சேர்ந்த ஆனந்த முருகன் என்ற வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றை பதிவு செய்தார். அந்த மனுவில், சில மாதங்களுக்கு முன்பு அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்புபடி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால் மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.  ஆதார் அட்டை கேட்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என ஆனந்த முருகன் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

 

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில், இறுதி உத்தரவு வரும் வரை, ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்தனர். மேலும் விசாரணை, ஜனவரி, 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது எனக் கூறினர். 

மூலக்கதை