‘என் மகனின் தந்தை பிரதமராகிறார்’ : இம்ரான்கானின் முதல் மனைவி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘என் மகனின் தந்தை பிரதமராகிறார்’ : இம்ரான்கானின் முதல் மனைவி வாழ்த்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் 95 சதவீதம் அறிவித்த நிலையில், பிரதமாராக வாய்ப்புள்ள இம்ரான்கானின் முதல் மனைவி, ‘என் மகனின் தந்தை பாகிஸ்தானின் பிரதமராகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்’ என, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் 272 தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மீதம் உள்ள 70 இடங்கள் நியமன அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் 4 மாகாணங்களுக்குட்பட்ட 577 இடங்களுக்கு 8,396 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை 95 சதவீதம் அளவிற்கு முடிவடைந்தது.அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களை தக்க வைத்துள்ளன.பாகிஸ்தானின் நேசனல் அசெம்பளி மற்றும் நான்கு மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை,  அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், பிடிஐ (இம்ரான்கான்)  கட்சி, பஞ்சாப் 118, சிந்து 20, கேபி 66, பலூசிஸ்தான் 4 ஆகிய இடங்களும்,  நேஷனல் அசம்பளியில் 110 இடங்களை வென்றது.

பிஎம்எல் - என் (நவாஸ் செரீப்)  பஞ்சாப் 127, சிந்து 0, கேபி 5, பலூசிஸ்தான் 1 மற்றும் நேசனல் அசெம்பளியில்,  63 இடங்களில் வென்றுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின்  பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் இதர கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக,  பஞ்சாப் 295, சிந்து 219, கேபி 97, பலூசிஸ்தான் 50 ஆகிய இடங்களும், நேஷனல்  அசெம்பளியில் 270 இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித், தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டில், “22 ஆண்டுகள் கழித்து, பல அவமதிப்புகள், தடைகள் மற்றும் தியாகங்களைக் கடந்து, எனது மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகிறார்.

தோல்விகள் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக் கொண்டு, விடாப்பிடியாக நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதுவொரு பாடமாகும். அவருக்கு வாழ்த்துக்கள்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெமிமாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்த இம்ரான் கான், 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெமிமாவை விவாகரத்து செய்த பின்னர், இம்ரான் கான் இரு முறை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை