பாகிஸ்தான் தேர்தலில் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி முன்னிலை பிரதமர் ஆகிறார் இம்ரான்கான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் தேர்தலில் தெஹ்ரிக்இஇன்சாப் கட்சி முன்னிலை பிரதமர் ஆகிறார் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தலில், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2013ல் நடந்த பொதுத்தேர்தலில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருடைய கட்சியை சேர்ந்த அப்பாஸி பிரதமர் ஆனார்.


ஆட்சிக்காலம் முடிந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரசாரம் தொடங்கியது முதலே தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது.



பிரசார பொதுக்கூட்டங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வேட்பாளர்களும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

மொத்தமுள்ள 272 தொகுதிகளில், சுமார் 10. 6 கோடி பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் வாக்குப்பதிவு மையங்களில் 4. 50 லட்சம் போலீசாரும், 3. 70 லட்சம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 85 ஆயிரம்  வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  வாக்களித்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பலுசிஸ்தான் தலைநகர் குவட்டாவில் உள்ள போசா மண்டி பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 போலீசார், 2 சிறுவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.



இதேபோல், வெவ்வேறு இடங்களில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தேர்தல் தொடர்பான இந்த வன்முறை சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்தனர். இந்த பரபரபான சூழலில், பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று இரவே தொடங்கியது.

ஆரம்பம் முதலே  இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் இருந்தது. இம்ரான் கானின் கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி 61 தொகுதிகளிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 40 இடங்களிலும், மற்றவை 50 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இம்ரான்கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் ஏற்பட்டதாக கூறி நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது.

 

இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால், அவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சிறிய கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவுடன் இம்ரான்கான் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது.

இம்ரான்கான், கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இந்த தேர்தலில்  அதிக இடங்களை கைப்பற்றியிருப்பது இம்ரான்கான் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.       
மொத்தமுள்ள 272 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை.

இந்நிலையில், இம்ரான்கான் கட்சி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே தேவை என்பதால், சுயேட்சைகள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.


படிப்படியாக முன்னேறிய இம்ரான்கான்
இம்ரான்கான் பாகிஸ்தானின் லாகூரில் 1952ம் ஆண்டு பிறந்தார்.

1971ல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இவர், சுமார் 21 ஆண்டுகாலம் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். 1992ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992ல் ஆண்டு உலக கோப்பையை வென்றது.
ஓய்வுக்கு பிறகு இம்ரான்கான் கிரிக்கெட் வர்ணனையாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

லாகூரில் புற்றுநோய் மையத்தை தொடங்கிய இம்ரான்கான் பிராட்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தராக  செயல்பட்டார்.

1996ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் என்ற கட்சியை இம்ரான்கான் தொடங்கினார்.

2002ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுதேர்தலில் இம்ரான்கான் கட்சி ஒரு இடத்தை பிடித்தது. 2008 தேர்தலை புறக்கணித்த இம்ரான் கட்சி, 2013 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 7. 5 மில்லியன் வாக்குகள் பெற்று 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

கட்சி தொடங்கி 22 ஆண்டுகளுக்கு பின் இம்ரான்கான் ஆட்சியை பிடித்துள்ளார்.  

.

மூலக்கதை