2025ம் ஆண்டுக்கு பிறகு மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை

தினகரன்  தினகரன்
2025ம் ஆண்டுக்கு பிறகு மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: 2025ம் ஆண்டுக்கு பிறகு மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக மின்சார வாகனங்களுக்கு குறிப்பாக மின்சார கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சீரான இயக்கம், பராமரிப்புச் செலவு, சுற்றுச்சூழல் மாசு குறைவு, ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ பயணம் ஆகியவை மின்சார வாகனங்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மின்சார வாகனங்கள் தற்போது மெல்லமெல்ல சாலைகளில் உலா வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்கு பிறகு 1500 சிசி வரை எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிந்துரை மீது விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாகனங்கள் மாற்றத்திற்கான நிதி ஆயோக்கின் கூட்டம் கடந்த மே மாதம் 14ம் தேதி நடத்தப்பட்டு சி முக்கிய பரிந்துரைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. அதன்படி 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு புதிய 3 சக்கர வாகனங்கள் விற்பனை, மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், மத்திய அரசு துறைகள், தொழில்முனைவோர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை