தங்கல் படத்தைப்போல் கென்னடி கிளப்

தினமலர்  தினமலர்
தங்கல் படத்தைப்போல் கென்னடி கிளப்

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து விஜய் நடிக்கும் பிகில் படம் தயாராகி வருகிறது. இன்னொருபக்கம், பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து கென்னடி கிளப் என்ற படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம் மீனாக்ஷி, காயத்ரி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 'கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அத்துடன் இந்த படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடிக்குழுவான வெண்ணிலா கபடி குழுவிலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளையும் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை அண்மையில் சென்சாருக்கு அனுப்பினார்கள். கென்னடி கிளப் படத்திற்கு 'U' சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்யும் முயற்சியில் உள்ளனர். ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'நல்லுச்சாமி பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கென்னடி கிளப் படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். விளையாட்டை மையமாக வைத்து அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் சீனாவில் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலைக்குவித்தது.

தங்கல் படத்தைப்போலவே கென்னடி கிளப் படமும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கபட்டிருக்கிறது. எனவே தங்களுடைய படமும் சீனாவில் வசூலைக்குவிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு?

மூலக்கதை