சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரிய விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரிய விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: தன் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரைப் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கியும், ஜாமீனில் விடமுடியாத கைது வாரண்ட்டையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, அடுத்த ஒரு மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இதையடுத்து, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன. இவ்வழக்கின் விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஒருவாரத்துக்குள் எழுத்து மூலமாக அவர் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2018ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சட்டத்தின் கீழ் தமது சொத்துக்களை முடக்குவது சட்டவிரோதம் எனவும், அரசுத் துறைகளின் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறும் கூறி விஜய் மல்லையா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை