14ம் தேதி நடக்கும் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல்: அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

தினகரன்  தினகரன்
14ம் தேதி நடக்கும் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்துநியூசிலாந்து மோதல்: அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

பர்மிங்காம்: உலகப்கோப்பை இரண்டாவது அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில் முதன்முறையாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது காலிறுதியாட்டம் பர்மிங்காம் நகரில் நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட டேவிட் வார்னர் தட்டுதடுமாறி 4 ரன் சேர்த்தார். அடுத்து 2வது ஓவரை வீசிய ஆர்ச்சரின் முதல் பந்தை சந்தித்த பிஞ்ச் எல்பிடபிள்யூ ஆகி அதிர்ச்சியளித்தார். இனி வார்னர் உஷாராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வரலாறை பொய்யாக்கினார். அவர் 3வது ஓவரில் 11 ரன்களுக்கு வோக்ஸ் பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 12 பந்துகளை சந்தித்து 4 ரன்களுக்கு வெளியேறினார். இந்தியா போலவே ஆஸ்திரேலியாவும் விளையாடுகிறதே என்று அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், அலெக்ஸ் கேரியும் நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். இந்திய வீரர்களை போல் ஒருவொரு ரன்னாக சேர்க்க அவர்கள் வெட்கப்படவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவொரு ரன்னாக சேர்க்க ஆரம்பித்தனர். அதனால் 6.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் என்ற நிலை மாறத் தொடங்கியது. அதே நேரத்தில்  இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுத் தராவிட்டாலும் விக்கெட் வீழ்த்தவில்லை. அதனால் பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தது அந்த அணி.  பொறுப்பாக ஆடியதால் ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 3விக்கெட் இழப்புக்கு 103 ரன்னை எட்டியது. அந்த நிலைமை அதிக நேரம் நீடிக்கவில்லை. ரஷீத் வீசிய பந்தை எல்லைக்கு விரட்ட முயன்ற கேரி பதிலி ஆட்டக்காரர் வின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 70 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் சேர்த்தார்.  கேரியும், ஸ்மித்தும் 4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர்.கேரி வெளியேறிய 28வது ஓவரில் ஸ்மித் 72 பந்துகளில் அரை சதம் அடித்தாார். ஆனால் அதே ஓவரில் பிஞ்ச் போலவே ரன் ஏதும் எடுக்காமல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 22,  கம்மின்ஸ் 6 என இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாவில் வெளியேறினர். ஆனால் ஒரு பக்கத்தில் ஸ்மித் நிலைத்து விளையாடினார். அதனால் 45வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்களை எட்டியது.  மீண்டும் பந்து வீச வந்த வோக்ஸ் பந்தில் ரன் எடுக்க முயன்ற ஸ்மித்தை  வீக்கெட் கீப்பர்  பட்லர் ரன் அவுட்டாக்கினார். களத்தில் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் இருந்த ஸ்மித் பொறுமையாக விளையாடி 119 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்த பந்தில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த  ஜேசன்  பெஹரண்டார்ப் 49வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க  ஆஸ்திரேலியா ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன் எடுத்தது. அந்த அணியின் நாதன் லயன் 5 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியின்  கிறிஸ்வோக்ஸ், அடில் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்களும்,  ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து 224 ரன் எடுத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  இறுதிப் போட்டிக்கு  முன்னேறலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடத் தொடங்கியது.பின்னர் ஆடத் தொடங்கிய இங்கிலாந்தும் ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. எனினும் பிட்சின் தன்மையை அறிந்த இங்கிலாந்து வீரர் ராய் 65 பந்தில் அதிரடியாக ஆடி 85 ரன் எடுத்தார். பெயர்ஸ்டோ 43 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார். ரூட் 46 பந்தில் 49 ரன்களும், கேப்டன் மோர்கன் 39 பந்தில் 45 ரன்களும் எடுத்து ஆவுட் ஆகாமல் இருந்தனர். இங்கிலாந்து வீரர்களில் ராய் மட்டுமே 5 சிக்ஸர், 9 பவுண்டரி அடித்தார். மற்றவர்கள் 11 பவுண்டரி மட்டுமே அடித்தனர். ஒருவர் கூட சிக்ஸர் அடிக்கவில்லை. கடைசியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்ெகாள்கிறது.

மூலக்கதை