ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழப்பதில் தமிழகம் முதலிடம்: மத்திய நிதியமைச்சக புள்ளிவிவரத்தில் தகவல்

தினகரன்  தினகரன்
ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழப்பதில் தமிழகம் முதலிடம்: மத்திய நிதியமைச்சக புள்ளிவிவரத்தில் தகவல்

புதுடெல்லி: ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், 2016-17ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 31 கோடி ரூபாய் பறிகொடுத்து ஹரியானா 3வது இடத்திலும், டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்கள் 18 கோடி ரூபாயை இழந்து 4வது இடங்களிலும் உள்ளன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 644 ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடமே அதிகளவு ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. வயதானவர்கள், தொழில்நுட்பத்தை அறியாத காரணத்தால் ஆன்லைன் மோசடியில் அதிகளவில் பணத்தை இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுதவிர இணையதள பயன்பாடு அதிகரித்திருப்பதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. மேலும், தமிழக காவல்துறை மற்றும் சைபர் க்ரைமும் ஆன்லைன் மோசடி குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் அதிகளவு புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளை தடுக்க வங்கிகள் அவ்வப்போது பல்வேறு வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. தொலைபேசியில் தொடர்புகொண்டு யாரேனும் வங்கி விவரங்களை கேட்டால் தெரிவிக்க கூடாது, வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி வழியே கணக்கு விவரங்களை கேட்பதில்லை. ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கச் செல்லும்போது தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்பதை உற்று நோக்க வேண்டும், ஏ.டி.எம். இயந்திரத்தில் அட்டையை செலுத்தும் முன்பு அதில் ஏதும் ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். மேலும், நெட் பேங்கிக் மற்றும் ஏ.டி.எம். அட்டைகளின் ரகசிய எண்ணை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும், ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையில் புகாரளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை