தமிழகத்தில் 710 தாலுகாவில் தண்ணீர் சேமிப்பு திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் 710 தாலுகாவில் தண்ணீர் சேமிப்பு திட்டம்

சென்னை: தமிழகத்தில் அபாயகரமான பகுதி என கண்டறியப்பட்ட 710 தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை குறைந்து கொண்டே செல்கிறது.

இது தொடர்பாக கடந்த அக்டோபரில் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,139 தாலுகாக்களில் இந்த ஆய்வு நடந்தது.

இதில், 358 தாலுகாக்கள் மிகவும் அபாயகரமானதாகவும், 105 தாலுகாக்கள் அபாயகரமானதாகவும், 212 தாலுகாக்கள் அபாயகரமான பகுதியாக மாறி வருவதாகவும், 35 தாலுகாக்களில் உப்புதன்மை மற்றும் மோசமான நீர் கிடைப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், 429 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தண்ணீர் பிரசனையை போக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் மிகவும் அபாயகரமான பகுதியாகவும், அபாயகரமான பகுதியாகவும் கண்டறியப்பட்ட 463 தாலுகாக்கள், மற்றும் அபாயகரமான பகுதியாக மாறி வரும் 212 தாலுகாக்கங்களிலும், 35 உப்புதன்மையாக மாறி வரும் தாலுகாக்களிலும் தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பேரில் மிகவும் பிரச்சனைக்குரிய தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

.

மூலக்கதை