பவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி

மான்செஸ்டர்: ‘‘உண்மையில் மிகக் கடினமான போட்டி. பவுலர்கள் மனம் தளராமல் உத்வேகத்துடன் போராடி வெற்றி தேடித் தந்துள்ளனர்’’ என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மான்செஸ்டரில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி, மழை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் நடந்தது.

நேற்று முன்தினம் நியூசி அணி 46. 1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி கூடுதலாக 28 ரன்களை சேர்த்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்களை நிர்ணயித்தது.

நியூசி.

அணியின் பவுலர்கள் துவக்க ஓவர்களிலேயே மிரட்டி விட்டனர். ஹென்றி மற்றும் போல்ட்டின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, 3. 1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் என இந்திய அணி திணறியது. தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என இந்திய அணியின் நிலை மேலும் மோசமானது.

30. 3 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இந்திய அணி 92 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வி உறுதி என்ற நிலையில் அனுபவ வீரர்கள் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு முனையில் டோனி விக்கெட் வீழாமல் நிலைத்து விட, மற்றொரு முனையில் ஜடேஜா அதிரடியில் இறங்கினார்.

இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவிக்க, ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது. ஆனால் 77 ரன்களில் (59 பந்துகள், 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஜடேஜா ஆட்டமிழந்த போது, இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

தொடர்ந்து 50 ரன்கள் எடுத்து டோனி ஆட்டமிழக்க, நியூசிலாந்தின் வெற்றி உறுதியானது. இறுதியில் 50 ஓவர்களில் 221 ரன்களில் இந்திய அணி ஆல்-அவுட் ஆனது. 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடர்ந்து 2வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றி குறித்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘‘உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ள இந்திய அணியை எதிர்த்து ஆடுகிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவே ஆடினோம்.



240, 250 ரன்கள் எடுத்தால், சேசிங்கில் இந்திய அணி வீரர்களுக்கு நெருக்கடி தர முடியும் என்று நம்பினேன். அதே போல் துவக்கத்திலேயே எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி, இந்திய வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர்.

இடையில் ஜடேஜா, டோனி ஜோடி சிறப்பாக ஆடிய போதும், எங்கள் பவுலர்கள் மனம் தளராமல் போராடினர்.
உத்வேகத்துடன் பந்து வீசிய அவர்கள் சரியான நேரத்தில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். பவுலர்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

சென்ற முறை போல் இல்லாமல் இந்த முறை, இறுதிப் போட்டி வித்தியாசமாக இருக்கும். இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘பேட்டிங்கில் முதல் அரை மணி நேரம் சொதப்பி விட்டோம்.

தவறான ஷாட்டுகளை தேர்வு செய்து ஆட்டமிழந்தோம். டோனி, ஜடேஜா அற்புதமாக ஆடினர்.

இருப்பினும் நியூசி. வீரர்கள் சரியான நேரத்தில் சிறப்பாக ஆடினர்.

இந்த வெற்றிக்கு நியூசி.

அணி, தகுதியானது’’ என்றார்.

.

மூலக்கதை